Thiru. V. Kalyanasundaram
அறிவு விளக்கமும் அன்பு நிகழ்ச்சியும் மக்கள் வாழ்விற்கு இன்றியமையாதன. வினை இல்வழி அறிவும் விளக்கமுறாது; அன்பும் நிகழாது. அறிவு விளக்கத்துக்கும் அன்பு நிகழ்சசிக் கும் ஊற்றாயிருப்பது வினை. வினை, அறிவுக்கும் அன்புக்குங் கொழுகொம்பு போன்றது. ஆதலால், மக்கள் வினைவழி அறிவு பண்பட்டு அன்பு நிகழும்.அறிவு - வினை - அன்பு, இவை முறையே வடமொழியில் ஞானம் - கருமம் - பக்தி எனப்படும். பொதுப்படக் கருமம் என்று கூறும்போது நிஷ்காமிய கருமம் என்று கொள்ளல் வேண்டும். நிஷ்காமிய கருமமாவது பயன் கருதாது புரியும் வினை. பயன் கருதா வினையில் தூய அறிவு அலர்ந்து, உண்மை அன்பு சொரியும்.ஞானத்துக்கும் பக்திக்கும் ஊற்றாயுள்ள கரும யோகத்தைத் தமிழ்நாட்டுச் சத்தியாக்கிரகிபாகிய அப்பர் சுவாமிகள் ’என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்று ஒரு பாவின் ஓர் அடியில் அமைத்து ஓதியிருக்கிறார். அப்பர் மனமொழி மெய்களால் இடையறாது பணிசெய்து, பணியின் திறத்தை யுணர்ந்தவர். அவர் மனத்தால் ஆண்டவனை நினைந்து, வாயால் அவன் புகழைப் பாடி, கையால் உழவாரத் தொண்டைச் செய்து, நிஷ்காமிய கருமயோகியாய், ஞானத்தையும் பக்தியையும் பெற்றுப் பேரின்பம் நுகர்ந்த வரலாற்றைப் பெரிய புராணத்திற் பார்க்க.அப்பெரியார் அருளிச்செய்த தமிழ் மறையில் ஞானமும் கருமமும் பக்தியும் ததும்பி வழிதலைக் காணலாம். அவரது அநுபவம் அல்லது அடைவு, ’என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்னுந் திருவாக்காகப் பரிணமித்தது என்று கூறலாம்.’என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்னுந் திருவாக்கில் எனக்கு அளவிலாப் பற்றுண்டு. இளமையில் இதைப் பற்றிச் சொற்பொழிவுகள் சில நிகழ்த்தினேன். இத்திருவாக்கைப் பற்றி ஒரு கட்டுரை வரைதல் வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டிருந்தேன்.