Thiru. V. Kalyanasundaram
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி - பகவன் முதற்றே உலகு என்றார் திருவள்ளுவனார். உலகம் ஒரு முழு முதலை யுடைத்து என்னும் உண்மையில் இஞ்ஞான்று ஐயங்கொள்ளும் அறிஞர் சிலரென்றே கூறலாம். செம்மை ஆராய்ச்சியான் நல்லறிவு முகிழ்க்கப் பெறாதார் கூற்றுக்களை உலகம் (உயர்ந்தோர்) ஏற்றுக்கொள்வதில்லை.ஆனால் கடையாயார் கூற்றுக்களான் இடையாயார் கேடுறாதவாறு காக்கவேண்டுவது தலையாயார் கடன்.கடவுளுண்மையில் உறுதி யுடையார் பலர். அவ்வுண்மை யுணர்ந்தார் சிலர். அவ்வுண்மை யுணரும் வழிகோலினார் மிகச் சிலர். அம் மிகச்சிலர் கோலிய வழியாது என்பதை விளக்குவது இந்நூல். இக் காரணம் பற்றியே இந்நூற்குச் சைவத் திறவு என்னும் பெயர் சூட்டப்பட்டது.தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபையின் நாற்பத்தைந்தாம் ஆண்டு விழா, ஆயிரத்தித் தொள்ளாயிரத்து இருபத்தெட்டாம் ஆண்டு, டிசம்பர் திங்கள், இருபத்தெட்டு இருபத்தொன்பதாம் நாட்களில், அடியேன் தலைமையில் நடைபெற்றது, அவ்விழாவில் தென்னாடுடைய சிவனே போற்றி - எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்னுந் திருவாக்கைக் குறிக்கோளாகக் கொண்டு அடியேன் தலைமையுரை நிகழ்த்தலானேன். அத் தலைமையுரையைக் கொண்டது இந்நூல்.இந்நூலிடை, மாணிக்கவாசகனார் நிலை, திருவண்டப் பகுதி நுட்பம், நினைப்பற நினைத்தலின் விளக்கம், மூவித உடலங்களின் பாகுபாடு, ஒரே கடவுளுண்மை, தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறை என்பது, இறைக்கும் இயற்கைக்கு முள்ள தொடர்பு, சேய் சிவம் என்பது, சமரசம், இறைவனை யுணரும்வழி, இறைவனது சொரூப தடத்த இயல்புகள், காவியங்களின் இன்றியமையாமை, நம்பிக்கையின் அவசியம், ஆராய்ச்சியின் அளவு, சைவத் திறவுள்ள இடம், கடவுளின் அகண்டாகாரப் படம்.