Ka. Appadurai
நாம் காணும் காலம் நிகழ்காலம்: காணாக் காலம் எதிர்காலம். ஆனால் நிகழ்காலத்தை அடிப்படையாகக்கொண்டே எதிர்காலத்தைக் காண முடியும், உருவாக்க முடியும்.. இப்பணியில் உதவுவது இறந்த காலமும் அது பற்றிய வரலாறும். ’வருங்காலத் தமிழகம்’ என்ற இந்நூலில் ஆசிரியர் நிகழ்கால நிலையாகிய, நிலத்தினையும் இறந்த காலமாகிய அதன் விதை, வேர், உரங்களையும் ஆய்ந்து பிறநாட்டு ஒப்புமை உணர்வால் வருங்காலத்துக்கு வழிகாட்டியுள்ளார். அவ் வருங்காலம் பற்றிய விரிவான திட்டம் ’தமிழன் திட்டம்’ எனத் தொடர்ந்து எழுதப்பெற்றுள்ளது. அது எம் நிலைய வாயிலாக விரைவில் வெளிவரும். இந்நூலின் முதற் பதிப்பை தமிழர் பதிப்பகத்தார் வெளியிட்டுத் தமிழ் இளைஞர்களின் பேராதரவைப் பெற்றது. அதன் இரண்டாம் பதிப்பைத் தமிழகம் எதிர் பார்த்த அளவில் விரைவில் வெளியிடக் கூடாது போயிற்று. இத்தகைய தமிழன்புமாறா ஆக்க நோக்குடைய நூல்களால் தமிழ் நாட்டின் நாட்டுரிமை வாழ்வாகிய ’உண்மைத் தேசிய வாழ்வு’ பண்டைப்புகழும் விஞ்ச வளருமென்று நம்புகிறோம்.இது போன்ற நல் நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் உதவிவரும் ஆசிரியர் பன்மொழிப்புலவர், கா. அப்பாத்துரை அவர்கட்கு எம் நன்றி. வாழ்க தமிழ். ஓங்குக தமிழ் வாழ்வு.